மாரடைப்பை ஏற்படுத்தும் உணவு – தவிர்க்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து
தற்போதைய நம்முடைய உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் பல சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனால் சர்க்கரை நோய், உடற்பருமன், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்தான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, நாம் நம்முடைய உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன மயமாக்கலால் எங்கு பார்த்தாலும் பதப்படுத்தப்பட்ட, செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளே நிரம்பியுள்ளன. இது இதய நோயின் ஆபத்தை இரு மடங்காக்குகிறது. குறிப்பாக உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிகப்படியாக எடுத்துக்கொள்வதால் இதய நோய் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஒரு காலத்தில் சர்க்கரை அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று அது பல உணவுகளில் சேர்க்கப்பட்டு ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
இருப்பினும், உணவில் சர்க்கரையை அதிகமாக சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். அதிகப்படியாக சர்க்கரை எடுத்துக்கொண்டால், உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படலாம்.
இவை அனைத்துமே இதய நோய்களை உண்டாக்கும் காரணிகளாகும். மேலும் சர்க்கரை நிறைந்த உணவுகளால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதுவும் இதய நோய்களை ஏற்படுத்தும்.
அதிகப்படியாக உப்பை எடுத்துக் கொள்வதும் உங்கள் இதயத்தை பாதிக்கலாம். நமது உடலுக்கு உப்பு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்றாலும், அதை உட்கொள்ளும் கட்டுப்பாட்டை மீறும்போது உடலுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பொதுவாகவே, உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்பட்டு இதய பாதிப்புகளை உண்டாக்கலாம்.
என்னதான் உடலுக்குக் கொழுப்பு தேவை என்றாலும், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இவை எண்ணெயில் வறுத்த பொருட்கள், துரித உணவுகள் மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் காணப்படுகிறது. இதிலிருந்து உடலுக்குள் செல்லும் அதிகப்படியான கொழுப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, நீங்கள் எத்தகைய உணவை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை அறிந்து அவற்றை உண்பதால் உடற்பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.