தூங்கும்போது குறட்டை விடுபவரா நீங்கள்? காரணம் தொடர்பில் வெளியான தகவல்
நீங்கள் தூங்கும்போது குறட்டை விட இந்த 9 விஷயங்கள்தான் காரணம் என்பது தெரியுமா..?
நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட முழுமையான தூக்கத்தை தூங்கிவிட முடியாது.
என்ன செலவானாலும் பரவாயில்லை, எத்தனை மருத்துவரைப் பார்த்தாலும் பரவாயில்லை, இந்தக் குறட்டை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் முதலில் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குறட்டை எப்படி உருவாகிறது? : வாய் மற்றும் மூக்கு இடையிலான சுவாசப் பாதையானது தூங்கும்போது அடைபடுவதன் காரணமாக குறட்டை சத்தம் உண்டாகிறது. இந்த அடைப்பு எதனால் ஏற்படுகிறது, அதற்கு நாம் எந்த வகையில் காரணமாக அமைகின்றோம் என்பதை பார்க்கலாம்.
தொண்டை அமைப்பு காரணமாக இருக்கலாம்: நம் தொண்டை அமைப்பு கூட நமக்கு குறட்டை வருவதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு குட்டையான கழுத்து மற்றும் தடிமனான சருமம் அல்லது குரல் வளையை ஒட்டி சதை தொங்குவது, உள்நாக்கு வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக குறட்டை சத்தம் கேட்கலாம்.
உடல் பருமன்: உடல் பருமன் உடையவர்களை பார்த்தாலே இவர்களெல்லாம் நன்றாக குறட்டை விட்டு தூங்குபவர்கள் என்ற முன் முடிவுக்கு நாம் வந்துவிடுவோம். அது ஓரளவுக்கு உண்மை தான். கழுத்து மற்றும் குரல்வலை பகுதியை சுற்றிய அதிகப்படியான தசைகளும் கூட குறட்டைக்கு காரணமாக அமைகின்றன.
வயது: முடி உதிர்தல், சருமம் சுருக்கம் அடைதல் போன்றவை மட்டும் வயோதிகத்திற்கான அறிகுறிகள் அல்ல. குறட்டை விடுவதும் கூட வயோதிகத்தின் அறிகுறி தான். குரல்வலை பகுதியின் தசைகள் பலவீனம் அடைவதன் காரணமாக குறட்டை சத்தம் வரலாம்.
மது அருந்துவது: மது அருந்துவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு பாதிப்பு வரும் என்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் உண்டு. ஆனால், குறட்டை சத்தத்திற்கு கூட இது வழிவகுக்கும் என்பது பலரும் அறியாத தகவல். மது அருந்தினால் சுவாசப் பாதை சுருங்க தொடங்குகிறது.
மூக்கு அடைப்பு: அலர்ஜி, சைனஸ் தொற்று அல்லது மூக்கு உள்ளே சதை வளர்ச்சி போன்றவை காரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் காற்று சுவாசப் பாதையில் தடை ஏற்படும் நிலையில் அதன் காரணமாக உங்களுக்கு குறட்டை ஏற்படலாம்.
தூங்கும் பொசிஷன்: இடதுபக்கமாக தலை சாய்த்து, ஒரு பக்கமாக தூங்குவது தான் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படாது. உங்கள் முதுகுப் பகுதியின் ஆதரவில் நீங்கள் தூங்கும்போது உங்கள் நாக்கு தொண்டையுடன் ஒட்டிவிடும். இதானால் சுவாசப்பாதை சுருங்கு குறட்டை சத்தம் உண்டாகும்.
சிகரெட் பிடித்தல்: புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என்ற விழிப்புணர்வு வாசகத்தை ஒவ்வொரு முறையும் தியேட்டர் செல்லும்போது கேட்டிருப்பீர்கள். அதே சமயம், புகைப்பிடிப்பதால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தசைகள் எரிச்சல் அடைகின்றன. இதனால் வீக்கம் மற்றும் மூச்சுப் பிரச்சினை ஏற்படும்.
மருந்துகள்: நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளும் குறட்டை சத்தத்திற்கு வழிவகை செய்யும். உதாரணத்திற்கு மயக்க மருந்துகள், தசைகளை வலுவிழக்க செய்யும் மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் தசைகள் வலுவடைந்து குறட்டையை உண்டாக்கும்.
தூக்கமின்மை: அசந்து தூங்குவது தான் நல்ல பலனை தரும். தூக்கம் போதுமானதாக இல்லை என்றாலும் கூட உங்களுக்கு குறட்டை பிரச்சினை ஏற்படலாம். நாளொன்றுக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும்.