பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்!
மரபு ரீதியாக ஏற்படும் பார்வைக் கோளாறுகள் மட்டுமின்றி நாம் பின்பற்றும் முறையற்ற வாழ்வியல் காரணமாகவும் ஒருவருடைய பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகும். இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற கேஜெட்டுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் சில உணவுகளை சாப்பிட்டே பார்வைத் திறனை நாம் மேம்படுத்த முடியும். மேலும் பார்வையில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும். நமது கண்களை ஒரு கேமரா போல நினைத்துக் கொள்ளுங்கள், கேமராவில் பயன்படுத்தப்படும் பிலிம் ரோல் தான் Retina எனப்படும் விழித்திரை. இதுதான் நம்முடைய பார்வைக்கு முக்கியம் என்பதால் இதற்குத் தேவையான உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
விட்டமின் ஏ சத்து நிறைந்த எல்லா விதமான உணவுகளுமே விழித்திரைக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த விட்டமின் ஏ சத்து பளிச்சென இருக்கும் பழங்கள் காய்கறிகள் அனைத்துமே நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு குடைமிளகாய், பீட்ரூட், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளிலும், ஆரஞ்சு, வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம் உள்ளிட்ட பழங்களிலும் வைட்டமின் A சத்து நிறைந்திருக்கும்.
கீரை வகைகள் என்று பார்க்கும்போது பொன்னாங்கண்ணி பார்வைக்கு மிகவும் நல்லது. ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அக்கீரையின் மகத்துவம் தெரிவதில்லை. எனவே வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த பழங்கள் காய்கறிகள் கீரை வகைகளை நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
அடுத்ததாக குங்குமப் பூவிலும் பார்வைத்திறனை மேம்படுத்தும் மருத்துவ குணம் இருக்கிறது. இதை தினசரி சிறிதளவு பாலில் கலந்து குடிக்கலாம். ஆனால் விலை தான் அதிகமாக இருக்கும். மேலும் மீன் வகைகள் என்று பார்த்தால், அதிக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன்கள் கண்ணுக்கு நல்லது.
வைட்டமின் ஏ சத்து போலவே வைட்டமின் டி சத்தும் நம்முடைய பார்வைத் திறனுக்குத் தேவையானது. காலையில் சூரியன் உதிக்கும்போது வரும் வெயிலில் கொஞ்ச நேரம் உலாவுவது மூலமாக நமக்கு விட்டமின் டி சத்து கிடைக்கும்.
எனவே உங்களுடைய பார்வைத்திறனை மேம்படுத்த அல்லது எதிர்காலத்தில் பார்வைக்குறைபாடு ஏற்படாமல் இருக்க விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.