ஆஸ்திரேலியாவில் மூவரின் உயிரை பறித்த காளான் – வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலியாவில் நச்சுத்தன்மை மிக்க காளான்களை உட்கொண்டதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு பெண், நச்சுத்தன்மை மிக்க காளான்களைத் தெரியாமல் சமைத்துப் பரிமாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் சமைத்த beef Wellington உணவை உட்கொண்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
4ஆவது நபர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். உணவில் “death cap” வகைக் காளான்கள் இருந்திருக்கக் கூடுமென பொலிஸார் நம்புகின்றனர்.
உணவைச் சமைத்த எரின் பட்டர்சன் (Erin Patterson) சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாம் அந்தக் காளான்களைக் கடையிலிருந்து வாங்கியதாகவும் அவை நச்சுத்தன்மை மிக்கவை என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
அந்த உணவை அவர், தமது மாமனார், மாமியார், உள்ளூர் சமய போதகர், அவரது மனைவி ஆகிய 4 பேருக்குப் பரிமாறினார். பட்டர்சனும் அவரது கணவரும் சிறிது காலமாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
உணவை உட்கொண்ட இரவே இரண்டு தம்பதியும் நச்சுணவுக்கான அறிகுறிகளோடு உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் சென்றனர். அவர்களில் 70 வயது போதகர் மட்டுமே கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
தமது விருந்தாளிகள் போல் தமது உடல்நலமும் பாதிக்கப்பட்டதாகப் பட்டர்சன் குறிப்பிட்டார். அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.