டி20 தொடரை சமன் செய்யுமா இந்திய அணி?
மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்காவது போட்டியை இன்று எதிர்கொள்கிறது.
ப்ளோரிடாவின், லாடர்ஹில் பகுதியில் உள்ள சென்ட்ரல் ப்ரோவார்ட் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டி20 தொடரை சமன்செய்யும் நோக்கில் இந்தியா உள்ளது. ஆனால், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முயற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்புடன் உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 – 1 என்று முன்னிலையில் உள்ளது.
மூன்றாவது டி20 போட்டியில் கடைப்பிடித்த உத்தியையே இந்தப் போட்டியிலும் இந்திய அணி பின்பற்ற தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், டி20 போட்டியில் விளையாடாத ஒரு சில வீரர்களுக்கு இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், ஷுப்மன் கில்லும் களம் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் பங்கேற்கும் மூன்றாவது போட்டியாகும் இது. கடந்த இரண்டு போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. எனினும், இந்தப் போட்டியிலாவது அவர் தனது திறமையை வெளிப்படுத்தி ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் இந்திய அணியின் மத்திய ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். கேப்டன் ஹிர்த்திக் பாண்டியா, அக்ஸர் படேல் இருவரும் ஆல்ரவுண்டர்கள். குல்தீப் யாதவ் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் ஆடவில்லை என்றாலும் மூன்றாவது போட்டியில் ஓரளவு சிறப்பாகப் பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்களான யாதவும், சாஹலும் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட் எடுப்பார்கள் என நம்பலாம். அர்ஷ் தீப்பும் அணியில் தொடர்ந்து இடம்பெறக்கூடும். எனினும், பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு பதிலாக இந்த முறை உம்ரான் மாலிக் விளையாடலாம் என்று தெரிகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜாஸன் ஹோல்டர் மீண்டும் அணியில் இடம்பெறலாம். ஆல்ரவுண்டரான அவர் அணிக்குத் தேவை. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சிறந்த ஆட்டக்காரர் விருதை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக முந்தைய போட்டியில் இடம்பெற்ற ரோஸ்டன் சேஸ், இந்த முறை ஹோல்டருக்கு வழிவிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய ஆணி: யஷஷ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹிர்த்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
மேற்கிந்திய தீவுகள் அணி: கீல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஜான்ஸன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹேட்மையர், ரோவ்மன் போவெல் (கேப்டன்), ஜாஸன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் ஹோஸின், அல்ஜார்ரி ஜோசப், ஓபெத் மெக்காய்.