இத்தாலி-லம்பெடுசா தீவில் இரண்டு கப்பல் விபத்துகளில் இருவர் பலி
இத்தாலிய தீவான லம்பேடுசாவில் இரண்டு குடியேறிகள் படகுகள் மூழ்கியதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது விரைந்து செயற்பட்ட இத்தாலிய கடலோர காவல்படை இன்றைய தினம் இரண்டு உடல்களை மீட்டுள்ளதுடன் 57 பேரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) கூற்றுப்படி, முதல் படகில் இருந்து சுமார் 28 பேர் கடலில் வீழந்து காணாமல் போயுள்ளதாகவும், இரண்டாவது படகில் இருந்து மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படகுகளும் கடந்த வியாழன் அன்று துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஒரு படகில் 48 பேரும் மற்றை படகில் 42 பேரும் பயணம் செய்துள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை நீடிப்பதால், லம்பேடுசா கடற்கரையின் பாறைப் பகுதியில் சிக்கிய சுமார் 20 பேரை மீட்க தீயணைப்புப் படை மற்றும் அல்பைன் மீட்புக் குழுக்கள் இன்றைய தினம் தயாராக இருந்தன.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து அவர்கள் அங்கு இருக்கிறார்கள், கடுமையான காற்று காரணமாக அவர்களின் படகு பாறைகளில் சிக்கியுள்ளது.