சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை களைவதற்கு சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுநீரகம் தொடர்பான சத்திரசிகிச்சையின் பின்னர் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நேற்று (27) உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில், இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்ததாக குழந்தையின் தந்தை கூறுகிறார்.