போதகர் ஜெரோமின் 11 கணக்குகளில் 12 பில்லியன் ரூபாய்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, 12.2 பில்லியன் ரூபா புழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
போதகரின் 11 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது, அவருக்கு இந்தப் பணம் எப்படி வந்தது? அவற்றை டெபாசிட் செய்தது யார்? போன்ற தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவன தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“மிராக்கிள் டோம்” பிரார்த்தனை மையத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 2.5 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார்.
மேலும் அந்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது? இன்னும் ஆழமான விசாரணை நடத்தப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.