வறுமையில் வாடும் மக்கள்: சமுர்த்தி கொடுப்பனவுகளையும் இடை நிறுத்தும் அரசாங்கம் – மக்கள் விசனம்
திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரங்கல் சாந்தி நகரில் வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள மக்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாகத்தினால் தற்பொழுது சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மிகவும் வறுமை கோட்டிங் கீழ் வாழும் மக்களுடைய கொடுப்பனவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உண்பதற்கு உணவில்லாமல் பசியுடன் காலத்தை கழித்து வரும் எம்முடைய சமுர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதை கவலை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓலை குடிசையில் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வாழ்ந்து வரும் இக்கட்டான நிலையில் அரசு வாழ்வாதார திட்டத்தை முன்னெடுக்காமல் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளையும் இல்லாமல் செய்வது மிகவும் வேதனை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை கிண்ணியா பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தி உள்ள நிலையில் அவர் தங்களுடைய கஷ்ட நிலையை பார்ப்பதற்கு கூட வீடுகளுக்கு வரவில்லை எனவும் கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி குழுக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே வறுமையில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை சிறந்த முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.