பல்வலியை 10 நிமிடங்களில் இலகுவாக போக்கும் பாட்டி வைத்தியம்!
தலைவலியைப் போல பல்வலியும் ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். சாதாரணமாக தண்ணீர் குடிக்கக் கூட முடியாமல் நம்மை அவஸ்த்தைப்பட வைக்கும் பல்வலியை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
பின் வரும் வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
1. கிராம்பு ஒன்றை எடுத்து கடைவாய் ஓரம் அதக்கிக் கொண்டால் பல்வலி குறையும்.
2. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, பல் வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் சிறிது நேரத்தில் வலி குறையும்.
3. ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து, அதை பேஸ்ட் போல மைய அரைத்து, அதில் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம்.
4. அரை ஸ்பூன் கடுகு எண்ணெய்யில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை உருண்டையாக்கி பாதிக்கப்பட்ட பல்லில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு வாய் கொப்பளிக்கலாம்.
5. ஒரு ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காயை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, தடவி, பத்து நிமிடம் வைத்திருந்து, பின் வாய் கொப்பளிக்கலாம்.
6. பூண்டில் உள்ள அல்லிசின் எனும் வெளிர் மஞ்சள் நிற திரவம், பல்லில் வலியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் வல்லமை மிக்கது. மூன்று பூண்டுப் பற்களுடன், சிறிது உப்பு மற்றும் நான்கு மிளகு சேர்த்து நசுக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால் வலி குறையும்.
7. அரை டீஸ்பூன் கல் உப்பை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இது இயற்கையான கிருமிநாசினியாக செயல்பட்டு, வீக்கத்தைக் குறைக்க உதவும். பாக்டீரியாக்களையும் அழித்து விடும்.
8. அரை ஸ்பூன் பெருங்காயத்தை சூடுபடுத்தி, அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றைக் கலந்து, காட்டன் உருண்டையில் நனைத்து பல்லின் மீது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்தால் வலி படிப்படியாகக் குறையும்.
பற்களின் ஆரோக்கியம் மேம்பட:
1. தினமும் காலையும், இரவும் சுத்தமாக பல் தேய்க்கவும். வாரம் ஒரு முறை பொடித்த கல் உப்பை பேஸ்டில் தடவி பல் தேய்க்கவும்.
2. ஒவ்வொரு முறை உணவு, தின்பன்பண்டங்கள் உண்ட பின்பும் வாய் கொப்பளிக்கவும்.
3. மிகவும் சூடாகவோ, அதிக குளிர்ச்சியாகவோ திரவங்களை குடிக்கக்கூடாது.
4. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வரவும்.
5. பற்களும், ஈறுகளும் வலிமையாக இருக்கவும் வாய்வழி ஆரோக்கியம் மேம்படவும் ஒவ்வொரு நாளும் ஒரு நெல்லிக்காய் மற்றும் ஒரு பச்சைக் கேரட் சாப்பிடவும்.
6. தினமும் அரை ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்புளித்து வந்தால் பற்சிதைவு, பல்வலி இல்லாமல் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
7. மைதா சார்ந்த உணவுகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், கலர்ப்பொடி சேர்க்கப்பட்ட ஹோட்டல் உணவு வகைகளை அரிதாக மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.