ஐரோப்பாவை வாட்டியெடுக்கும் வெப்பம்!!! 16 நகரங்களுக்கு எச்சரிக்கை
புவி வெப்பமயமாதலால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகளில் கடுமையான மழையும், சில நாடுகளில் கடும் வறட்சியும் ஏற்படுகிறது.
நாசாவின் கூற்றுப்படி, வெப்பநிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து ஜூன் 2023 பதிவு செய்யப்பட்ட வெப்பமான மாதமாகும்.
தொழில்துறைக்கு முந்தைய வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது அடுத்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் தற்போது நிலவி வருகிறது.
இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இத்தாலியில் உள்ள 16 நகரங்கள் கடும் வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
முடிந்தவரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறும் நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது பதிவான அனைத்து வெப்ப நிலைகளையும் தாண்டிவிட்டோம்.
கடந்த வாரம் மிகவும் வெப்பமான நாட்களைக் கொண்டிருந்தோம். இன்னும் வெப்பமான நாட்கள் வரவுள்ளன.
கடல் மேற்பரப்பில் வெப்பநிலையும் சாதனை அளவு அதிகரித்துள்ளது. இது ஒரு அவசரநிலை,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.