ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை – இத்தாலியில் ஒருவர் பலி
ஐரோப்பாவை ஒரு வாரத்துக்கும் மேல் வாட்டியெடுத்து வரும் வெப்ப அலைகளால், இத்தாலி நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பாவில் சில நாள்களாக நீடித்துவரும் வெப்ப நிலை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த புதன் அன்று சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் நிலவியது.
சிசிலித் தீவுகள், சர்தனியா நாடுகளில் உச்சபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் என முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாலை மங்கியபிறகும் வெப்பத்தின் தாக்கம் மக்களை விடுவதாக இல்லை. அமெரிக்கா, பிற உலக நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க் கிழமையன்றே ஐரோப்பிய வானிலை அமைப்புகளின் செயற்கைக்கோள் அமைப்புகள், ஸ்பெயின் நாட்டில் சில பகுதிகளில் 60 டிகிரி செலசியஸ்வரை வெப்பநிலையைப் பதிவுசெய்துள்ளன.
மொத்தம் பதின்மூன்று வகையினராக மக்கள் பிரிவினரை, அதிக ஆபத்து கொண்டவர்கள், குறிப்பிட்ட ஆபத்து வாய்ப்புள்ளவர்கள், ஆபத்து வாய்ப்புள்ளவர்கள் என்று பிரித்து, முறையே சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கைகளையும் வெளியிட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் பூமி கண்காணிப்புப் பகுதியாக, கோப்பர்னிகஸ் செண்டினல்-3 செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலமாகவே இந்த வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ச்சியாக உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலி, கிரேக்க நாடுகளில் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தந்த நாடுகளின் சார்பில் கவனக் குறிப்புகளும் எச்சரிக்கைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. ரோம் நகரில் ஆங்காங்கே உள்ள நீரூற்றுகளில் சுற்றுலாப் பயணிகள் நீரைப் பிடித்துக்கொண்டும், நனைந்துகொண்டும் தங்களின் உடல் சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், இத்தாலியில் மிலன் நகருக்கு அருகில் லோடி எனும் நகரில், சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்த 44 வயது பணியாளர் சுருண்டு விழுந்துள்ளார். செவ்வாயன்று நிகழ்ந்த சம்பவத்தின்போது 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அங்கு நிலவியது. அதிக வெப்பத்தைத் தாங்கமுடியாத அவருக்கு சுயநினைவின்றி விழுந்ததும் மரணம் சம்பவித்தது என இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.