இஸ்ரேலில் மீண்டும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்
 
																																		இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேலில் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் அனைனவரும் டெல் அவிவ் நகரில் குவிந்து முழக்கமிட்டனர்.
பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தன் மீது உள்ள புகார்களை ரத்து செய்ய சட்டவிதிகளை மாற்றி வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மக்கள் போராட்டங்களையும் மீறி இஸ்ரேல் பிரதமர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அங்கு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-வில், அரசியல் அழுத்தத்தின் காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக காவல்துறை அதிகாரி அமி எஷத் அறிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் அழுத்தம் கொடுத்து வந்ததாக காவல் துறை அதிகாரி அமி எஷத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தினால், மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இரவில் அயலான் நெடுஞ்சாலை உட்பட பல இடங்களில் போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலைகளில் நடனமாடியும், பொருள்களை எரித்தும் தங்களது போராட்டங்களை வெளிப்படுத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை அடித்து விரட்டினர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை மறுசீரமைப்பை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
