291 பயணிகளின் உயிர்பலிக்கு காரணமான ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: விசாரணையில் வெளியான தகவல்
291 பயணிகளின் உயிர்பலிக்கு காரணமான ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னலிங் மற்றும் ஆப்ரேஷன்ஸ் துறைகளைச் சேர்ந்த நிலைய பணியாளர்களின் தவறே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோதியது.
இதில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா இடையேயான அதிவேக ரயில் மோதியது.
இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்துக்கு முற்றிலும் மனித தவறே காரணம் என்று ரயில்வே துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது.
இந்த விபத்து நடந்த நாளன்று சிக்னல் பராமரிப்பாளர் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் துண்டிப்பு மெமோ சமர்ப்பித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது. வேலை முடிந்ததும் எலெக்ட்ரானிக் இண்டர்லாக் சிக்னலிங் அமைப்பு சரியாக இருந்ததை குறிக்கும் வகையில் இணைப்பு மெமோவும் வழங்கப்பட்டது. ஆனால் ரயிலை கடந்து செல்ல அனுமதிக்கும் முன் சிக்னல் அமைப்பை சோதனை செய்யும் பாதுகாப்பு நெறிமுறை பின்பற்றப்படவில்லை என ரயில்வே வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் மறு இணைப்பு மெமோ வழங்கப்பட்ட பின்னரும் சிக்னலிங் ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே விபத்திற்கு நிலையத்தின் செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் சிக்னல் பராமரிப்பு ஊழியர்களே கூட்டுப் பொறுப்பு என சி.ஆர்.எஸ். எனப்படும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
இது தவிர மின்னணு, இன்டர்லாக் சிக்னலிங் அமைப்பின் மையமான, ரிலே அறையை அணுகுவதற்கான நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரயில் விபத்திற்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு முற்றிலும் மனித தவறே காரணம் என ரயில்வே துறை விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.