எவருக்கும் அநீதி இழைக்கப்பட கூடாது!!! ஜனாதிபதி பணிப்பு
எவருக்கும் அநீதி இழைக்கப்படாமலும், எவரும் பின் தங்கி விடப்படாமலும் அஸ்வசும சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வசுமா நலத்திட்ட பயனாளிகள் தேர்வில் பயனடைய வேண்டியவர்கள், ஆனால் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் மேல்முறையீடு செய்ய ஜூலை 10-ம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் இத்திட்டத்திற்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கணக்கெடுப்பின் பின்னர் 3.3 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுக்களின் ஊடாக மாவட்டச் செயலாளரின் தரவுகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைக் கண்காணித்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நன்மைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் என மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு உட்பட்டு 2 மில்லியன் பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.