ஒரே சீனா கொள்கையை கடைபிடித்து வரும் இலங்கை : நாமல் கருத்து!
இலங்கையும் எப்போதும் ஒரே சீனா கொள்கையை கடைபிடித்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை-சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 எம்.பி.க்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் ‘இலங்கையும் சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால் நன்மைகள் பரஸ்பரம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களுக்கு இடையேயான உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது என்று நாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு சீனா துணை நின்றது எனவும் அதேபோன்று இலங்கையும் எப்போதும் ஒரே சீனா கொள்கையை கடைபிடித்து வருகிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
‘இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை கொண்டு வரக்கூடிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பல்வேறு மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் பல நாடுகள் பக்கபலமாக மாற மறுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் புவியியல் பிரிவுகளில் கவனம் செலுத்தாது உலகளாவிய வளர்ச்சி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் விஷயங்களைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.