அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 34 பேர் பலி
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
லக்னோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள பல்லியா மாவட்டத்தில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன, கடந்த வியாழன் அன்று 23 இறப்புகளும் வெள்ளிக்கிழமை மேலும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று பல்லியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
“அனைத்து மக்களும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடுமையான வெப்பத்தால் அவர்களின் நிலை மோசமாகிவிட்டது…”
இதன்படி, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அதிகளவான மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலுடன், மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் தண்ணீர், மின்விசிறிகள் அல்லது குளிரூட்டிகள் இல்லாததால் பலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, அப்பகுதி மக்களும் மின்வெட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இருப்பினும், மாநிலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைத்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின்படி, வெள்ளியன்று பல்லியாவில் அதிகபட்சமாக 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.