தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன்காரணமாக தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் எனவும் கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் மக்களின் வலியுறுத்தியுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டில் தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இவ்வருடம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பதிவாகிய இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 108 ஆகும். கடந்த இரண்டரை வருடங்களில் இணைய குற்றங்கள் தொடர்பில் 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வருட காலப்பகுதியில் 1187 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளில் 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என்றார்.