யாருப்பா இது… தனுஷா??? உருமாறும் வித்தை படிச்சிருப்பாரோ…..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50வது படத்திற்கு தயாராகி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் பல ஆச்சரியங்களை கொடுக்க ரெடியாகும் தனுஷ் தன்னுடன் இரண்டு டாப் ஹீரோக்களையும் கூட்டணி சேர்த்து இருக்கிறார்.
அந்த வகையில் மூன்று அண்ணன் தம்பி கதையை மையப்படுத்தி தான் இப்படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே பா பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்த தனுஷ் தற்போது ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்து வருகிறாராம்.
தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும். இதை அவரே கூட சமீபத்தில் உறுதி செய்திருந்தார். அந்த வகையில் அவர் இப்படத்தில் தனுஷின் அண்ணனாக நடிக்கிறாராம்.
அது மட்டுமின்றி பிரபல இளம் ஹீரோ சந்தீப் கிஷனும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவ்வாறாக எஸ் ஜே சூர்யா, தனுஷ் இருவரின் தம்பியாக நடிக்கும் இவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் இந்த மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடிக்கிறாராம். அது மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களும் இப்படத்தில் இணைய இருக்கின்றனர்.
அந்த வகையில் தனுஷ் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் சிறப்பான ஒரு குடும்ப படத்தை தான் எடுக்க இருக்கிறார். ஆனால் இதிலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. என்னவென்றால் அன்பு, பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டாலும் அதிரடி ஆக்சனுக்கும் குறைவில்லாமல் இருக்குமாம். மேலும் மூத்த அண்ணனாக வரும் எஸ் ஜே சூர்யா இதுவரை நடிக்காத ஒரு வில்லத்தனத்தையும் இதில் காட்டுவார் என்று கூறப்படுகிறது.
இப்படி பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த படத்திற்காக தனுஷ் தன்னுடைய ஸ்டைலையும் மாற்ற இருக்கிறார். தற்போது கேப்டன் மில்லர் படத்திற்காக தாடி, மீசை, நீண்ட தலை முடி என இருக்கும் இவர் தன் 50வது படத்திற்காக மொத்தமாக உருமாற இருக்கிறாராம்.
இது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கும் நிலையில் வரும் ஜூலை 1 ல் படப்பிடிப்பை ஆரம்பித்து 90 நாட்கள் இடைவெளி இல்லாமல் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.