செய்தி

மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகன்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டிப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மருமகன் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வடமராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த அரச உத்தியோகத்தர், தனது வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது தனது இரண்டு பிள்ளைகளையும் ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு, மனைவியைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

எனினும், கணவனைத் தள்ளிவிட்டுத் தப்பிய மனைவி, பிள்ளைகளை மீட்டுக்கொண்டு அருகில் உள்ள கடையொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

மனைவி தனது தாய் வீட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகத்தின் பேரில் மந்திகையில் உள்ள மாமியார் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபர், அங்கு தனது மாமியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, மறைத்து வைத்திருந்த வாளினால் மாமியை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (67 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய சந்தேகநபர், அருகில் உள்ள பழச்சாறு கடையொன்றில் நின்று கொண்டிருந்த தனது மாமனார் காசிப்பிள்ளை யோகராசா என்பவரை அவதானித்து அவர் மீதும் மூர்க்கத்தனமான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அங்கு நின்றவர்கள் சந்தேகநபரைப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த யோகராசா பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான அபிவிருத்தி உத்தியோகத்தரைக் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!