சண்டையை விலக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!
உறவினர்கள் இருவருக்குள் நடந்த சண்டையை விலக்கச் சென்ற ஒருவரை சண்டையிட்ட ஒருவர் கடித்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்ற நிலையிலும், அவரது நிலைமை மோசமானது.
ப்ளோரிடாவைச் சேர்ந்த டோனி ஆடம்ஸ் , வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றின்போது உறவினர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டையிட, அவர்களை விலக்கிவிட முயன்றுள்ளார். அப்போது ஒருவர் ஆடம்ஸை தொடையில் கடித்துள்ளார்.உடனடியாக ஆடம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சையளித்துள்ளார்கள். ஆனால், அவரது நிலைமை மோசமாகியுள்ளது.
மூன்றாவது நாள் கால் வீங்கி நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஆடம்ஸுக்கு. சதை அழுகும் ஒரு பயங்கர தொற்று உருவாகியுள்ளதாக அவரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.ஆடம்ஸின் காலைக் காப்பாற்றுவதற்காக, கடிபட்டு தொற்று ஏற்பட்ட இடத்திலிருந்து 70 சதவிகித சதையை மருத்துவர்கள் அகற்றவேண்டியதாகியுள்ளது.மனிதக்கடி நாய்க்கடியை விட மிக மோசமானது என்று கூறும் ஆடம்ஸின் மருத்துவரான Fritz Brink, மனிதனுடைய வாயில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும். சாதாரண பாக்டீரியா கூட இரத்தத்துக்குள் நுழைந்துவிட்டால் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்கிறார்.
அறுவை சிகிச்சையிலிருந்து குணமடையவே ஆடம்ஸுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்ட நிலையில், முழுமையாக குணமடைவதற்காக, அவர் ஆறு மாத சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.நடந்ததை ஒரு நாளும் மறக்கமுடியாத அளவுக்கு பெரிய தழும்பு ஒன்று அவரது தொடையில் காணப்படுகிறது. ஒரு மனிதக்கடி இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் ஆடம்ஸ்