ஒரு வாரம் முடங்குமா பிரித்தானியா? – புலம்பெயர்வோருக்கு எதிரான ஒருவார மாபெரும் வேலைநிறுத்தம்
புலம்பெயர்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு பிரித்தானிய அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அரசின் குடிவரவு கொள்கைகள், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் ஒன்றிணையும் சூழலில், “The Great British National Strike” என்ற அமைப்பு நாடு முழுவதும் ஒரு வார வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
புலம்பெயர்வோருக்கு எதிரான இந்த போராட்டம், அரசியல் கவனத்தை ஈர்க்கும் முயற்சியா அல்லது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு அழுத்த அரசியலா என்ற கேள்வியை தற்போது பிரித்தானிய சமூகத்தில் எழுப்பியுள்ளது.
பிரித்தானியா முழுவதும் ஒரு வாரம் வேலைநிறுத்தம் நடத்த வேண்டும் என “The Great British National Strike” என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் புலம்பெயர்வோருக்கு எதிரான போராட்டமாக நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் டொலால்ட்சன் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெற வேண்டும் என்றும், அந்த காலகட்டத்தில் பாடசாலைகள், அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டஅனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு வாரம் முழுவதும் பிரித்தானியாவின் இயல்பு வாழ்க்கை முறையை நிறுத்துவதன் மூலம் புலம்பெயர்தல் தொடர்பான பிரச்சனைகளில் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளாக, சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு வேலைவாய்ப்புகளை மறுக்க வேண்டும், குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தற்காலிகமாக வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது, புலம்பெயர்தல் விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் மற்றும் மருத்துவம், கல்வி, வீடு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அழைப்புக்கு சமூகத்தில் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் இதனை அரசியல் கவனம் ஈர்க்கும் முயற்சி என விமர்சிக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், இது புலம்பெயர்தல் தொடர்பான சமூக விழிப்புணர்வு முயற்சி என பார்க்கிறார்கள்.
ஒருவேளை இந்த வேலைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தால், அதன் தாக்கம் பல துறைகளில் காணப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலைகள் மூடப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.
அலுவலகங்கள் மற்றும் தொழில்கள் செயல்படாத நிலையில், பல நிறுவனங்களின் வருவாய் குறையும்.
கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டால் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு ஏற்படும். மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்படுவது மிகுந்த கவலைக்குரியதாகும்.
இந்நிலையில் சமூக ஊடகங்களில் இந்த வேலைநிறுத்த அழைப்புக்கு பெரிய ஆதரவு இல்லை என்றும், இதுவரை கிடைத்த எதிரொலி குறைவாகவே இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால், இது உண்மையில் நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தமாக மாறுமா, அல்லது ஒரு எச்சரிக்கை முயற்சியாகவே முடிவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு முழுவதுமான வேலைநிறுத்த அழைப்புகள் பெரிதான ஆதரவைப் பெறவில்லை என்றும், அவை பெரும்பாலும் உள்ளூர் அளவிலான பாதிப்புகளோடு முடிந்துள்ளன என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நீண்டகால தேசிய அளவிலான தாக்கம் குறைவாகவே இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர்வோரருக்கு நேரடி பாதிப்பு
இந்த வேலைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தால், அதன் முதல் மற்றும் நேரடி தாக்கம் புலம்பெயர்வோர்மேல் தான் விழும் என சமூக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம், வருமான இழப்பு, வீட்டு வசதி சிக்கல்கள், விசா மற்றும் குடியுரிமை தொடர்பான சட்ட பிரச்சனைகள் போன்றவை அதிகரிக்கக்கூடும்.
மேலும், பாடசாலைகள் மூடப்பட்டால் புலம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். மருத்துவ சேவைகள் குறைவடைந்தால், புலம்பெயர்வோர் சிகிச்சை பெறுவதில் தாமதம் மற்றும் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். சமூக ரீதியாகவும், உள்ளூர் மக்கள் மற்றும் புலம்பெயர்வோர் இடையே பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம்.
இதன் விளைவாக மன அழுத்தம், எதிர்காலம் குறித்த அச்சம், நிலையான வாழ்க்கை குறித்த நம்பிக்கையிழப்பு போன்றவை புலம்பெயர்ந்த சமூகத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில், இந்த வேலைநிறுத்த அழைப்பு வெறும் அரசியல் நடவடிக்கையா அல்லது மனிதர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் ஒரு ஆபத்தான முயற்சியா என்பது குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் உண்மையில் நாட்டின் நலனுக்கானவையா, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்வி தற்போது பிரித்தானிய சமூகத்தில் எழுந்துள்ளது.





