மாதவிடாய் ஆரோக்கியம் அடிப்படை உரிமை – அனைத்து மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை வழங்குமாறு உத்தரவு
மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை பாடசாலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் 06 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் 2024 டிசம்பர் 10 அன்று, தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், ‘‘தனியார் மற்றும் அரசுப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மட்கும் தன்மை கொண்ட மாதவிடாய் சானிட்டரி பேட்கள் இலவசமாக வழங்கப்படுவதை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை. அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் உள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி இது.
அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் வழங்கப்பட வேண்டும்.
கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி பேட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த வசதிகளை தனியார் பாடசாலைகள் வழங்கத் தவறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.





