கனடாவில் கடுமையான பனிப்பொழிவு – டொரெண்டோ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
1999 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகளவிலான பனிப்பொழிவை கனடா சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இருப்பினும் நாளை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என டொராண்டோ (Toronto) மாவட்ட பாடசாலை வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பாடசாலை மற்றும் நிர்வாக தளங்களில் இருந்து பனியை அகற்றும் பணியில் அதன் ஊழியர்களும் ஒப்பந்ததாரர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படும் எனவும், சில பகுதிகளில் இருந்து வருவது சவாலானதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் பாடசாலைக்கு வரும்போது தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் கூடுதல் நேரம் ஒதுக்குமாறு TDSB வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை யார்க் (York) பகுதியிலும் நாளைய தினம் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





