காசா பகுதியின் முக்கிய எல்லையை திறக்க நிபந்தனை விதித்த இஸ்ரேல்!
எகிப்துடனான காசா பகுதியின் முக்கிய எல்லைக் கடவையை மீளவும் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் காசா பகுதியில் எஞ்சியிருக்கும் கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியின் உடலை மீட்கும் நடவடிக்கை முடிந்த பின்னரே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி பணயக்கைதியான மாஸ்டர் சார்ஜென்ட் ரன் க்விலியின் (Master Sgt Ran Gvili) உடலைத் திருப்பி அனுப்ப ஹமாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கிடையே காசாவின் வட பகுதியில் அவரது எச்சங்களைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரேலின் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
2024 முதல் ரஃபா கடவை பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தனது சமீபத்திய அறிவிப்பில் கடவையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை வழங்குவதாகத் தோன்றினாலும், க்விலியை தேடுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியவில்லை.
ஆகவே இந்த செயற்திட்டம் காலதாமதமாகலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





