சீனாவுடன் உறவை வளர்க்கும் கனடா : வரி விதிப்பிற்கு தயாராகும் ட்ரம்ப்!
“கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடிய பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 100% வரி விதிக்கப்படும்.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தனது நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்ரூத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும், அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை முற்றிலும் அழியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் வரி விதிப்பை மறைமுகமாக சாடிய பிரதமர் மார்க் கார்னி கனேடிய மக்கள் உள்நாட்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“மற்ற நாடுகள் என்ன செய்கின்றன என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, நாமே நமது சிறந்த வாடிக்கையாளராக இருக்க முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் கனடா பிரதமர் சீனாவிற்கு பயணம் செய்து, இரு நாடுகளின் பதட்டமான உறவை மீட்டெடுக்கவும், அமெரிக்காவிற்குப் பிறகு கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டவும் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





