அரச வைத்திய அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பு – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளர்கள் பெரும் சிரமம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு ,இன்றைய தினமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முன்தினம் அதற்கான தீர்வு காணப்பட்ட நிலையில் மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கும் வகையில் பணிபகிஸ்கரிப்பு இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகை தராத காரணத்தினால் நீண்ட தூரம் பயணித்து வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.
தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு தமது சங்கம் ஆதரவு வழங்கவில்லையெனவும் வழமைபோன்று தமது வைத்தியர்கள் சேவைகளில் ஈடுபட்டுவருவதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்க மட்டக்களப்பு கிளை அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.





