புலிகள் அன்று வன்னியில் செய்ததை இன்று தெற்கில் செய்ய முற்படுகிறது ஜே.வி.பி.: சம்பிக்க குற்றச்சாட்டு
“வன்னியில் புலிகள் அமைப்பு அன்று செய்ததுபோல இங்கு ஜே.வி.பி. JVP பொலிஸ், ஜே.வி.பி. இராணுவம், ஜே.வி.பி. நீதிமன்றம் என்பவற்றை உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க Champika Ranawaka குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சட்டமா அதிபர்கள் சிலர் கடந்த காலங்களில் பக்கச்சார்பாக செயல்பட்ட நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய சட்டமா அதிபர் சட்டத்தின் பிரகாரம் செயல்படுகின்றார்.
தனிக்கட்சி அரசொன்றை நோக்கியே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. தமக்கே உரித்தான பொலிஸ், இராணுவம், கணக்காய்வாளர் மற்றும் நீதிமன்றம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது.
வடக்கில் புலிகளுக்கு பொலிஸ், நீதிமன்றம், வங்கி, இராணுவம் இருந்தன. வன்னியில் புலிகளுக்கு இருந்ததுபோல இங்கு செய்வதற்கு முற்படுகின்றனர். எனவே, ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் இதற்கு இடமளிக்க கூடாது.
அரசாங்க பலம் மட்டும் தமக்கு போதாது, அரச பலம்கூட வேண்டும் என்றே லால்காந்தா குறிப்பிட்டிருந்தார். மேற்படி விடயத்தையே இது பிரதிபளிக்கின்றது.” – என்றார்.





