இந்தியாவில் தேர்தல் வாக்குறுதிக்காக 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை
தெலுங்கானா மாநிலத்தின் கமரெட்டி மற்றும் ஹனம்கொண்டா (Kamareddy – Hanamkonda) உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, தெரு நாய்கள் மற்றும் குரங்குகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த கொடூரக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
நாய்களுக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டும், நீண்ட தடிகளில் கட்டப்பட்ட ஊசிகள் மூலம் கொடிய விஷம் செலுத்தப்பட்டும் அவை கொல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஒன்பது கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் “மனிதாபிமானமற்றது” எனக் கண்டனம் தெரிவித்துள்ள மாநில அரசு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தெரு நாய்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





