ஆப்கானிஸ்தான் பயணத்தைத் தவிர்க்குமாறு பெய்ஜிங் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷார்-இ-நவ் (Shahr-e-Naw) பகுதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இத்தாக்குதலில் 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சீனாவில் உய்குர் (Uyghur) முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சீன நாட்டவர் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தாலிபான் அரசாங்கத்தை பெய்ஜிங் வலியுறுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியவும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன மக்கள் ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது





