ஈரானில் சிக்கியுள்ள 16 இந்திய மாலுமிகள்: பிரதமருக்குக் குடும்பத்தினர் அவசரக் கோரிக்கை
ஈரானின் புரட்சிக் காவல் படையினரால் (IRGC) சிறைபிடிக்கப்பட்டுள்ள ‘வேலியன்ட் ரோர்’ (Valiant Roar) கப்பலில் உள்ள 16 இந்திய மாலுமிகளை விரைவாக மீட்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி இந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அதில் சல்பர் திரவமே இருந்ததாக மாலுமிகள் தரப்பு கூறுகிறது.
தற்போது 10 மாலுமிகள் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் தற்போது அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு மாலுமிகளை மீட்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.





