குயின்ஸ்லாந்தை நிலைகுலையச் செய்த சூறாவளி: கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ‘கோஜி’ (Koji) சூறாவளி இன்று காலை கரையை கடந்துள்ளது.
ஏயர் (Ayr) மற்றும் போவன் (Bowen) நகரங்களுக்கு இடையே கரையை கடந்த இந்த சூறாவளியால், மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்து வருகின்றது.
இதனால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதோடு, சுமார் 15,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய ஒரு தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட இதுவரை ஏழு பேர் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக போவன் மற்றும் மேக்கே (Mackay) போன்ற பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சூறாவளி தற்போது வலுக்குறைந்துள்ள போதிலும், அடுத்த 48 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியான கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு குயின்ஸ்லாந்து பிரீமியர் டேவிட் கிரிசாஃபுல்லி (premier, David Crisafulli)கோரிக்கை விடுத்துள்ளார்.





