மதுரோ அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுதலை!
அரசியல் கைதிகளாகக் கருதப்படும் சிலரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித உரிமை ஆர்வலரான ரோசியோ சான் மிகுவல் ( Rocio San Miguel) உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் அதன் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸின் சகோதரருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், விடுவிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அல்லது அடையாளத்தைக் குறிப்பிடாமல், “கணிசமான எண்ணிக்கையிலானவர்கள்” உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்திருந்தார்.
வெனிசுலாவில் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையாகும். குறிப்பாக தேர்தல்கள் அல்லது போராட்டங்களைச் சுற்றியுள்ள அடக்குமுறை அதிகரிக்கும் தருணங்களில் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





