பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு
எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியான பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக சிறப்பான பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடநெறி உள்ளடக்கம் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயணிகள் பேருந்துகள், பாடசாலை வேன்கள், அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த பொதுப் போக்குவரத்து உரிமம் அவசியமாக இருக்கும் என அமைச்சர் கூறினார்.
தற்போது கனரக வாகன உரிமம் 21 வயதில் வழங்கப்படுகின்ற போதும், பொதுப் போக்குவரத்து உரிமம் 25 வயதில் வழங்கப்பட வேண்டும் என்றும், பாடசாலை வேன்கள் மற்றும் பேருந்துகளை ஓட்ட பொதுப் போக்குவரத்து உரிமம் பெற 30 வயதை அடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு முன், ஓட்டுநர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை சலுகை காலம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பொதுப் போக்குவரத்து உரிமத்திற்கான இரண்டு நாள் பயிற்சியை இதுவரை சுமார் 6,000 ஓட்டுநர்கள் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





