புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதலா? ரஷ்யாவின் குற்றச்சாட்டிற்கு உக்ரைன் அதிரடி மறுப்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்றான ‘வால்டாய்’ (Valdai) இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை உக்ரைன் முற்றிலுமாக மறுத்துள்ளது.
வடக்கு ரஷ்யாவின் நோவ்கோரோட் (Novgorod) பகுதியில் உள்ள புடினின் ‘டோல்கியே போரோடி’ (Dolgiye Borody) இல்லத்தை நோக்கி மொத்தம் 91 தொலைதூர ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் இந்த 91 ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துவிட்டதாகவும், இதனால் உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) இந்தக் குற்றச்சாட்டை “கற்பனையான கதை” மற்றும் “அப்பட்டமான பொய்” என்று விமர்சித்துள்ளார்.
காரணம் உக்ரைன் மீது மீண்டும் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுக்கவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கவும் ரஷ்யா இத்தகைய பொய்களைப் பரப்புவதாக உக்ரைன் கூறுகிறது.
அதிபர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelensky) அறிக்கையில் “ரஷ்யா தனது தோல்விகளை மறைக்கவும், உக்ரைனின் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரணத்தை உருவாக்கி இந்த நாடகத்தை ஆடுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புடின் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நடுவே நிகழ்ந்துள்ளது.
புடினுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், இந்தச் சம்பவம் உண்மையென்றால் அது அமைதி முயற்சிகளைப் பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இது ரஷ்யாவின் புனையப்பட்ட கதையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.




