மெக்சிகோவில் சோகம் – 13 பேரின் உயிரை பறித்த ரயில் விபத்து!
தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏறக்குறைய 100 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகன் கடற்படையின் கூற்றுப்படி, ஓக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் உள்ள டெஹுவான்டெபெக் (Tehuantepec) ரயில்வேயின் இஸ்த்மஸின்(Isthmus) லைன் Z இல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த ரயில் 250 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 98 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு முயற்சிகளுக்கு உதவ 360 கடற்படை வீரர்கள், வான் மற்றும் தரை ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு தந்திரோபாய ட்ரோனை அனுப்பியதாக மெக்சிகன் கடற்படை தெரிவித்துள்ளது.
தடம் புரண்டதற்கான காரணத்தை மாநில மற்றும் மத்திய நிறுவனங்கள் தொடர்ந்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





