பதவி துறக்க மாட்டேன்: கட்சி மறுசீரமைக்கப்படும்! ஜீவன் அறிவிப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
அவரால் இன்று (19) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதொகாவின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன.
காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இதொகாவின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஜீவன் தொண்டமானால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ இதொகா என்பது இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எமது முன்னோர்களின் தியாகங்களினால் கட்டமைக்கப்பட்ட ஸ்தாபனமாகும்.
இதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல.
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.
இதற்கமைய அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.
சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் போது, ஸ்தாபனம் உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.” – என்றுள்ளது.





