இலங்கையின் சுற்றுலாத் துறையையும் தாக்கியதா டித்வா புயல்?
பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பேரிடர் நிலையால் அந்த இலக்கை இவ்வருடம் அடைய முடியாமல்போனது.
எனினும், சுற்றுலாத்துறை வருமானம் தக்கவைக்கப்பட்டது. இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை வரவைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடரும்” என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.





