அவசரமாக இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் – காரணம் என்ன?
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து வலியுறுத்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெற உள்ளதாக தெரிய வருகிறது.
தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் உட்பட பல்வேறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிய வருகிறது.
சந்திப்பில் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மனுவை இந்தியா உயர்தனிகரிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக ரீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பிலும் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாட உள்ளனர்.





