பிரசவ செலவை ஈடுகட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா!
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய மகப்பேறு மற்றும் அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட அனைத்து பிரசவ செலவுகளையும் ஈடுகட்டும் வகையில் ஒரு விரிவான கொள்கையை அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரசவத்தின் போது எபிடூரல் மயக்க மருந்தை (epidural anaesthesia) வழங்க வேண்டும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£376) குழந்தை பராமரிப்பு மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட 20 மில்லியன் குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சுகாதாரப் பாதுகாப்பு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதையும் அதன் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை சவால்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை 2022 இல் பல தசாப்தங்களில் இல்லாத சரிவை கண்டது. இந்த போக்கு 2024 வரை நீடித்தது மற்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





