மீட்பு பணிக்காக அமெரிக்க படையினரும் களத்தில்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல நாடுகளும் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் உதவிப் பொருட்கள் சகிதம் இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, யாழ்ப்பாணம், அனுராதபுர உள்ளிட்ட இடங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளில் ஈடுபடவுள்ளன.
அமெரிக்க விமானங்களையும் படையினரையும், கட்டுநாயக்க விமான நிலையத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
அதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீகரம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் படையினர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





