தன்னார்வ இராணுவ சேர்க்கை – மக்ரோன் வெளியிடவுள்ள முக்கிய தகவல்!
ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரான்ஸ் புதிய இராணுவ சேவை திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு இளைஞர்களுக்கு தன்னார்வமாக இராணுவத்தில் பணியாற்ற ஒரு புதிய விருப்பத்தை வழங்குவதற்கான தனது நோக்கத்தை மக்ரோன் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்படுத்திய நிலையில் புதிய அறிவிப்பு வரவுள்ளது.
ரஷ்யாவின் போர் ஐரோப்பிய கண்டத்தை “பெரும் ஆபத்தில்” ஆழ்த்தியதால், பிரான்ஸ் தனது பாதுகாப்பை அதிகரிக்க முயற்சி செய்வதாக அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதல் இராணுவச் செலவினமாக 6.5 பில்லியன் யூரோக்களை (7.6 பில்லியன் டாலர்) செலவிட எதிர்பார்ப்பதாகவும் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இதன்படி வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் பாதுகாப்பிற்காக 64 பில்லியன் யூரோக்களை செலவிட இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பிரான்சின் இராணுவத்தில் சுமார் 200,000 செயலில் உள்ள பணியாளர்களும் 40,000 க்கும் மேற்பட்ட ரிசர்வ் வீரர்களும் உள்ளனர். 2030 ஆம் ஆண்டுக்குள் ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக அதிகரிக்க பிரான்ஸ் இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





