ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி!
கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ( Nicolas Maduro) நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து” பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.
சைமன் பொலிவரை ( Simon Bolivar) நினைவுகூரும் விழாவில் உரையாற்றிய அவர் சர்வதேச தீவிர வலதுசாரிகளின் புதிய ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
கரீபியன் கடற்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாக கூறி அமெரிக்க இராணுவத்தினர் 80 பேரை கொன்றுள்ளனர்.
அத்துடன் போதைப்பொருளுக்கு எதிரான வலுவான நடவடிக்கை என்ற பெயரில் குறித்த பகுதியில் இராணுவ பிரசன்னத்தையும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் வெனிசுலா அதிகாரிகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை திட்டமிட்ட ஆக்கிரமிப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் கியூபா அமெரிக்க இராணுவ இருப்பை “மிகைப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையிலேயே தாம் செயற்படுவதாக ட்ரம்ப் தரப்பிலான நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




