வெனிசுலா ஊடாக பறப்பதில் ஆபத்து – சேவைகளை இரத்து செய்த விமான நிறுவனங்கள்!
வெனிசுலாவில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக உலகின் பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்நாட்டிற்கான விமான சேவைகளை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவில் உள்ள விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மரிசெலா டி லோயிசா (Marisela de Loaiza) அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
TAP, LATAM, அவியான்கா (Avianca), ஐபீரியா (Iberia), கோல் (Gol) மற்றும் கரீபியன் (Caribbean) உள்ளிட்ட 06 விமான நிறுவனங்கள் சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் துருக்கிய (Turkish) விமான நிறுவனங்கள் நவம்பர் 24 முதல் 28 வரை விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருவதால் அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் அந்நாட்டின் வான்வெளியை பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.





