இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது.
2004ஆம் ஆண்டு ஹிக்கடுவ பரேலியில் இடம்பெற்ற புகையிரத விபத்தின் பின்னர் இதுவே உலகின் மிக மோசமான ரயில் விபத்து என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணியளவில் இந்த பயங்கர ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு ஓடும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாலசோரில் தடம் புரண்டதில் முதல் விபத்து ஏற்பட்டது.
ரயில் தடம் புரண்டதும், அதிலிருந்த பெட்டிகள், அதற்கு இணையாக செல்லும் இரண்டு ரயில் தண்டவாளத்தின் மீது வீசப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதின.
அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், அதிவேகமாக வந்து ரயில் பெட்டிகள் மீது மோதியதால், இரண்டாவது விபத்து ஏற்பட்டது.
விபத்துக்கு முகங்கொடுத்த ஒருவர் குறிப்பிடுகையில்,
“சுமார் 10 முதல் 15 பேர் என் உடம்பில் விழுந்தார்கள், நான் எல்லோருக்கும் கீழே இருந்தேன், என் கை, என் கழுத்தின் பின்புறம் காயம், நான் வெளியே வந்தபோது பார்த்தேன், சிலருக்கு கால்கள் இல்லை, சிலருக்கு கைகள் இல்லை, சிலரின் முகம் முற்றிலும் காயம்.”
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் நிவாரண சேவை அதிகாரிகளுக்கு உதவியதை காண முடிந்தது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதலாக 100 வைத்தியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வந்தன. இதுவரை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை மறைக்க துணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை பார்வையிட ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று வந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை இன்று பார்வையிட்ட அவர், பின்னர் காயமடைந்தவர்கள் தங்கியுள்ள மருத்துவமனைகளை பார்வையிட்டார்.
மேலும், இந்த பயங்கர ரயில் விபத்தால் அம்மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
மேலும், 2004-ம் ஆண்டு பரேலியில் நடந்த ரயில் விபத்துக்குப் பிறகு உலகின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து 1981 இல் பதிவு செய்யப்பட்டது. அந்த விபத்தில் சுமார் 800 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.