ஜப்பான் உலகுக்கு முன்னுதாரணமான நாடா? பிரதமரின் தூக்கம் பற்றிய கருத்தால் பெரும் சர்ச்சை!
உலகம் கண்கொள்ளாத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்று பாராட்டப்படும் ஜப்பான், மற்றொரு பெயராலும் உலகை அதிர்ச்சி அடையச் செய்கிறது. தூக்கமின்றி ஓடும் தேசம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இது சாதனை அல்ல, ஜப்பான் சமூகம் முழுக்க தள்ளாடி நிற்கும் நிலையை காட்டும் எச்சரிக்கை மணி என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு பிரதமரின் கடிகாரம் இரவு 02 மணிக்கு துடிக்கத் தொடங்கி 04 மணிக்கு நிற்கும் போது, அந்த நாட்டின் குடிமகனின் வாழ்க்கை எந்த திசையில் ஓடும்?
ஜப்பானை பற்றிய உலக கருத்து இப்போது மாறுகிறது. முன்னேற்றம் தோற்றத்தில் மட்டுமா? அல்லது உள்ளே ஒரு தேசம் மெதுவாக சிதறிக் கொண்டிருக்கிறதா?
உலகில் கடின உழைப்புக்கு பெயர் பெற்ற நாடு ஜப்பான். அந்த நாட்டில் மேலதிக நேர வேலை செய்வது சாதாரணமாகக் கருதப்படுகிறது.
இதனால் வேலை அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் வேலை காரணமாக ஏற்படும் மரணங்களும் தற்கொலைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலை உலகளவில் ஜப்பானின் ‘work-life balance’ மோசமாக உள்ளது என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த பின்னணியில் ஜப்பானின் புதிய பிரதமர் சானே தக்காய்ச்சியும் அதற்கேற்றவாறு ஒரு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டார்.
அவர் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அவர் அதிகாலை 02 மணி முதல் 04 மணி வரை மட்டுமே உறங்குவதாக தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பிரதமர் மிகவும் குறைவான மணித்தியாலங்களே தூங்குவது தவறான முன் உதாரணம் என விமர்சிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, அதிகாலை 03 மணிக்கு கூட அவர் கூட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது. ஜப்பானில் அதிக நேரம் வேலை செய்வதால் மக்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் ஆகின்றனர். பல ஊழியர்கள் அதிக வேலை அழுத்தத்தால் தெருக்களிலேயே மயங்கி விழுந்து தூங்குகிறார்கள்.
ஜப்பானியர்கள் வேலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்ற போதிலும் அதே நேரத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், உடல் நலம் ஆகியவற்றை புறக்கணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
ஜப்பான் அரசாங்கம் மக்களின் உடல் நலனையும் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டும் என நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் புதிய பிரதமர் தானே குறைந்த தூக்கத்தைப் புகழ்ந்து பேசுவது இந்த முயற்சிகளுக்கு முரணாக உள்ளது. இந்த போக்கு ஜப்பானில் வேலை அழுத்தத்தால் ஏற்படும் இறப்புகளை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
இதனால் எதிர்க்கட்சிகளும் தொழிலாளர் யூனியன்களும் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அரசு அதிக நேரம் வேலை செய்வதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கோருகின்றனர்.
மேலும் மக்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க உதவும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனிடையே ஜப்பான் அரசு மேலதிக வேலை நேர (overtime) விதிகளில் மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றம் தொழிலாளர் யூனியன்களுக்கு மேலுமொரு கவலைக்கான காரணமாக உள்ளது. ஜப்பான் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி நிலைமை மிகவும் ஆபத்தானது.
அந்த அறிக்கையின் படி White-collar jobs (கணக்காளர்,மென்பொருள் பொறியாளர்,வங்கிப் பணியாளர், மேலாளர், வழக்கறிஞர், ஆசிரியர், Data analyst / IT பணியாளர்,அலுவலக நிர்வாகி) செய்பவர்களில் ஐந்தில் ஒருவர் தீவிர
ஆரோக்கிய அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு பக்கவாதம், இதய நோய் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.
ஜப்பானின் வேலை கலாச்சாரம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவானது. அந்த காலத்தில் நாட்டை மீண்டும் எழுப்ப மக்களுக்கு மிக அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் நிறுவனத்திற்காக முழுமையாக அர்ப்பணித்தல் என்ற கலாச்சாரம் உருவானது. ஜப்பானில் ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை செய்வது பெருமையாகக் கருதப்படுகிறது.
இதனால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை நிறுவனத்திற்காகத் தியாகம் செய்வதற்கே பழகிவிட்டனர். ஜப்பானில் “KAROSHI” என்ற சொல் வேலை காரணமாக ஏற்படும் மரணத்தை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இது தொழில் ரீதியான மன அழுத்தத்தால் ஏற்படும் ஊழியர்களின் திடீர் மரணத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான கரோஷி சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பதிவு செய்யப்படாத சம்பவங்கள் இன்னும் பல மடங்கு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஜப்பானின் பெரிய நகரங்களில் ஊழியர்கள் தெருக்களில் தூங்குவது மிகவும் பொதுவான காட்சி.
ரயில்களில் பயணிக்கும் போது பலர் வேலைக்குப் பிறகு சோர்ந்து மயங்கி விழுகின்றனர். பலர் அதிக மதுப் பழக்கத்தால் உடல் நலத்தை இழக்கின்றனர். மக்கள் பலர் வீட்டிற்கு கூட நேரத்தில் செல்ல முடியாமல் நிறுவனத்திலேயே இரவு முழுவதும் இருப்பார்கள்.
ஜப்பான் அரசு வேலை நேரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைக் கடந்த ஆண்டுகளில் முன்னெடுத்துள்ளது. மாதத்திற்கு 100 மணியைத் தாண்டும் மேலதிக வேலை நேரம் (OT) சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு கட்டாயமாக விடுமுறை வழங்கும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஊழியர்கள் சட்டத்துக்கு உட்படாத முறையில் கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஜப்பானில் வேலை அழுத்தம் குடும்ப வாழ்க்கையையும் பாதித்துவிட்டது. குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
இளம் தம்பதிகள் வேலை காரணமாக குழந்தை பெறத் தயங்குகின்றனர். பல குடும்பங்களில் ஒன்றாக உணவு உண்ணும் வாய்ப்பே கிடையாது. 60 வயதில் ஓய்வு பெறும் நேரத்தில் உடல் நலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விடுகிறது.
பிரதமருக்கே தூங்க நேரமில்லை என்றால் குடிமகனுக்கு எப்படி இருக்கும் என நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்,
“ஒரு பிரதமர் மக்கள் நலனை பிரதிபலிக்க வேண்டும். தூக்கக்குறைவை பெருமைப்படுத்தும் தலைவர் ஜப்பானை தவறான திசையில் கொண்டு செல்கிறார்.” என்று பலரும் அச்சம் வெளியிடுகின்றனர்.
ஜப்பான் இப்போது உழைப்பும் வாழ்வும் இணைந்து செல்லும் புதிய சமநிலையை உருவாக்க வேண்டும். வேலைக்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது என்பது மக்களிடையே மேலும் வலியுறுத்தப்படுகிறது.
ஜப்பானின் முன்னேற்றம் மக்கள் நலனின்றி நீடிக்க முடியாது என்பதையும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாடு உண்மையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் நிம்மதியான வாழ்க்கை நடத்த வேண்டும். ஜப்பானுக்கு இன்று மிகத் தேவையான மாற்றம் 08 மணி நேர ஆரோக்கியமான உறக்கம்.





