ஐவர் புதையுண்டிருக்கலாம் என அச்சம்!
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். வீடொன்றுடனேயே குறித்த உணவகம் அமைந்திருந்துள்ளது. காயமடைந்தவர்கள் மானவல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது குறித்த உணவகத்துக்குள் சிலர் இருந்துள்ளனர். சுமார் ஐந்து பேர்வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அவர்களை மீட்பதற்குரிய மீட்பு பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடும் மழை பெய்துவந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர்வரை இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
30 பேரடங்கிய இராணுவ குழுவொன்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றது. குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
மண்சரிவு இடம்பெற்ற பகுதி மண்சரிவு அபாய வலயமென ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.





