இந்தோனேசியாவில் ஆபத்தின் மத்தியில் தொடரும் மீட்பு பணி – பலி எண்ணிக்கை உயர்வு!
இந்தோனேசியாவின் ஜாவா (Java) பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பேரிடர் தணிப்பு நிறுவனம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடும் மழை காரணமாக சிலாகாப் நகரத்திலும் (Cilacap), பஞ்சர்நேகரா (Banjarnegara) பகுதியிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல்போயிருந்தனர்.
இந்நிலையில் பஞ்சர்நேகரா பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 18 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 700 மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேடலில் பல தடைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம், குறிப்பாக குப்பைகளால் நிரம்பிய நிலச்சரிவு குளங்கள் மற்றும் தொடர்ந்து ஓடும் நீர் மழை காரணமாக புதிய நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் முஹாரி தெரிவித்துள்ளார்.




