கம்போடியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!
கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீம் ரீப்பில் (Siem Reap) இருந்து தலைநகர் புனோம் பென்னுக்கு (Phnom Penh) பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்லும் வரை வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேருந்து புறப்படும்போது சாரதி மயக்கமடைந்த நிலையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரும் இருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





