தாய்லாந்தில் போதைப்பொருள் வலைப்பின்னலைக் கண்டுபிடித்த காவல்துறை – சிக்கிய ரஷ்ய பிரஜை
தாய்லாந்தில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்றை அந்நாட்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குற்றசாட்டின் அடிப்படையில் ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புக்கெட்டில் (Phuket) இணையம் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புக்கெட்டிலுள்ள மின்கம்பங்களில் போதைப்பொருளை வாங்குவதற்கான QR குறியீட்டை ஒட்டி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் THAIHUB.TOP என்ற இணையதளத்தை நாடியது.
அதில் போதைப்பொருள் தொடர்பான அனைத்து விபரங்களும் விலைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
ரஷ்ய பிரஜையின் QR குறியீட்டைப் பயன்படுத்தி டெலிகிராம் செயலிக் குழுவில் இணைந்த காவல்துறை அதிகாரிகள், போதைப்பொருள் விற்பனையை ரகசியமாகக் கண்டுபிடித்தனர்.
குறித்த நபரிடம் போதைப்பொருள் வாங்குவது போன்று பாசாங்கு செய்து, நேரில் சென்ற போது சந்தேக நபரை கைது செய்தனர்.
இந்த முற்றுகை நடவடிக்கையின் போது, 6 பொட்டலங்களில் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய பிரஜைக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக 1.5 மில்லியன் பாத் அபராதமும் விதிக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





